உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை, ஒருவராலும் வரையறுத்துச் சொல்லமுடியாத அம்சமாகக் காமம் விளங்குகிறது. ஒரே நேரத்தில் எள்முனையளவு சிறிதாகவும் மலையளவு பெரிதாகவும் தோன்றி மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது காமம். காமத்தைக் கோடாரிக்கு நிகரான ஒன்றாகச் சித்தரிக்கிறார் திருவள்ளுவர். தன் முன்னால் கிடப்பது மரமா, சிற்பமா, கொடியா, செடியா என்பது கோடாரிக்கு ஒரு பொருட்டே இல்லை. பிளந்து வீசுவதையே தன் நெறியெனக் கொண்ட ஆயுதம் கோடாரி. நாணமென்னும் தாழ்ப்பாளால் அடைபட்டிருக்கும் கதவுகள் எல்லாம் ஓங்கிய கோடாரிக்கு முன்னால் ஒரு பொருட்டே அல்ல. அந்த விசையில் சுக்குநூறாகச் சிதைத்த பிறகே கோடாரி அமைதிகொள்ளும்.